அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தின் அவசியமும் அதற்கான சவால்களும்.

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தின் அவசியமும் அதற்கான சவால்களும்.

-பூங்கோதை  (கலா ஸ்ரீரஞ்சன்)

பல வித்தியாசமான பின்புலங்களில் இருக்கும் பல பெண் ஆளுமைகளையும் பெண்ணியவாதிகளையும் ஒன்று சேர்த்து அமைத்த, அருமையான ஒரு கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியாய் இருப்பினும்  அதில் பேசப்பட்ட விடயங்கள் மனதுக்கு கவலையாகவே இருக்கிறது.  இது வெறும் தேர்தல் காலத்துக்கானதாய் இல்லாமல் எப்போதுமே பேசப்பட வேண்டிய, எல்லோராலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகவே இருக்கின்றன.

பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அவர்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவும் பெண்களின் அரசியல் பிரவேசம் இன்றியமையாததாக இருப்பினும் பெண்கள் இது குறித்து எதிர் நோக்கும் சவால்களினால் ஆளுமையுள்ள பெண்கள் கூட அரசியலில் ஆர்வம் காட்டத் தயங்குகிறார்கள்.  இலங்கையின் வரலாற்றில் பல திறமையும் ஆளுமையும் உள்ள பெண்கள் அரசியலில் இருந்திருக்கிறார்கள், இருந்து வருகிறார்கள்.

இதில் பலராலும் அனுபவம் சார்ந்து எடுத்துரைக்கப்பட்ட சில விடயங்கள் நிச்சயமாகக் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை. தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் பொது வெளிக்கு, அதுவும் குறிப்பாக அரசியலுக்கு வரும் பெண்களை இழிவு படுத்துபவையாக வும் அவர்கள் எதிர் நோக்கும் சவால்கள் ஆண்கள் அரசியலில் எதிர்நோக்குகின்ற சவால்களை விட அதிகமான சிக்கல்களைக் கொண்டதாகவும்  அமைந்துள்ளது.  இந்தப் பதிவில் நான்  எழுதுகின்றவை இக்கலந்துரையாடல் மூலம் கிடைத்த தகவல்களோடு எனது தனிப்பட்ட கருத்துக்களையும்  அடக்குகின்றன.  இவ்வுரையாடலில் கலந்து கொண்டவர்களின்  பெயர்கள்  தவிர்க்கப்பட்டாலும்,  பேச்சாளர்களின் பெயர்கள், இக்கலந்துரையாடலுக்கான ஏற்பாட்டை  மேற்கொண்டவர்களின் பெயர்கள் இதன் முக்கியத்துவம் கருதி இந்தப் பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

 

சிக்கல் 1

ஆண்கள் போலல்லாது ஒரு பெண்ணானவள் பொது வெளிக்கு சேவை செய்ய வருவதற்கு முன்னரும் சரி அல்லது சேவை செய்யும் போதும் சரி, சமையல், குழந்தைகள் பராமரிப்பு, பொருளாதாரத் தேவைகள்  எனப் பலவகையான  குடும்பச் சுமைகளை சுமந்தவாறே தான் வர வேண்டியுள்ளது. அதிகமான பெண்களுக்கு இது ஒரு மிகப் பெரிய சவாலாகவேஅமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிக்கல் 2

அநேகமான கட்சிகளில் ஒரு பெண் வேட்பாளர் தனக்காக சேர்க்கும் வாக்குகளை  தனது கட்சிக்கு வளங்குவதற்காகவே  பயன்படுத்தப்படுகிறார், அது மட்டுமல்ல ஒருவாறு அவர் அந்த கட்சியில் சேர்ந்து இயங்குகின்ற சந்தர்ப்பம் கிடைத்தாலும்  அவர் தான் மக்களுக்கு செய்ய வேண்டும் என முயற்சிக்கின்ற ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை இழந்து விடுகிறார். அனேகமான திட்டங்கள் ஆண் கட்சி உறுப்பினர்களாலேயே தீர்மானிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.  தமது குடும்ப அமைப்பிலிருந்து பல சவால்களை முறியடித்து, பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்து பொது வெளிக்கு வந்து, அதன் பின்னர் அரசியலில் காலூன்றும் போது,  பெண்கள் தமது குரலை இங்கு இழந்து விடுகிறார்கள். பெண்கள் வெறும்  பொம்மைகளாகவே இருக்க வேண்டிய நிர்பந்தம் பல கட்சிகளிலும் ஏற்படுத்தப்படுகின்றது.

 சிக்கல் 3

அரசியலுக்கு வரும் பெண்களைப் பற்றிய பாலியல் ரீதியான அவதூறுகளைப் பரப்புவதும், அதன் மூலம் அவர்களை அரசியலுக்கு வராமல் தடுப்பதும் தான் எமது சமூகத்தில்  பெரும்பான்மையான அரசியல் சார்ந்து நிற்கும் ஆண்களின்  தந்திரங்களில் பிரதானமானதாக இருக்கிறது.   எமது சமூகம் என்று சொல்கின்ற போது முக்கியமாக ஆண் ஆதிக்கங்களும் ஊடகங்கங்களும் சேர்ந்தே இப்படியான இழி செயலைச் செய்வது என்பது கவலைக்குரியது. இலண்டனிலுள்ள பி சி ஒளி / ஒலி பரப்புக்கூட்டுத்தாபனத்தின் 'டீக்கடை' நிகழ்ச்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். வெறுமே அரசியல் நையாண்டிகள் போல அல்லாது ஊடக தர்மம் மீறி இப்படியான ஒரு ஒளிபரப்பு செய்தவர்கள், இதில் சம்பந்தப்பட்டவர்கள்  தாம் நையாண்டி செய்த  இக்குறிப்பிட்ட பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பது அவசியம்.  அரசியலுக்கு வரும் பெண்களின் குரல் வளையை நசுக்கப் பார்ப்பது அநாகரீகமானது மட்டுமல்ல பெண்களுக்கான அரசியல் உரிமைகளை மழுங்கடிக்கப் பார்க்கும் சட்ட விரோத செயலுமாகும். 

அரசியல் ரீதியான கருத்துக்களை அல்லது அவர்கள் கட்சி சார்ந்த தேர்தல் விஞ்ஞாபனங்களை கிண்டல் பண்ணுவது வேறு அப்பெண்களை தனிப்பட்ட ரீதியில், பாலியல் ரீதியான அவதூறுகளைப்  பரப்பி அதன் மூலம் அவர்களை மன உளைச்சளுக்கு ஆளாக்கி, தனி நபர்

தாக்குதல் நடத்துவது வேறு என்பது புரியாத ஒரு ஊடகம் கூட இருக்கிறது அதை மக்கள் ரசிக்கிறார்கள் என்பது ஒரு சமூகத்தை, அதன் விழுமியங்களை எவ்வளவு தூரம் ஆரோக்கியமானதாக மாற்றி முன்னெடுத்துச் செல்லும்?

சிக்கல் 4

தனது கட்சியின் கொள்கைகளுக்கெதிரான ஒரு சிந்தனை எழும் போது  அதைத் தைரியமாக எதிர் கொள்ளும் பெண்கள் இல்லாமல் இருப்பது மாத்திரமல்ல, அப்படியான கேள்விகள் எழுப்பும்  பட்சத்தில் அப்பெண்களும் தமது கட்சிலிருந்து விலக வேண்டுமென திரை மறைவிலிருந்து உள்கட்சியின் பயமுறுத்தல் அப்பெண்ணின் மீது விழுகிறது.  

அனேகமாகப் பெண்களின் உரிமைகள் தொடர்பாக எந்தக் கட்சியிலும் தொடர்ச்சியான முற்போக்கான சிந்தனைகள் திட்டமிடப்படுவதில்லை. இப்படியான கட்சிகளில் இணைந்து கொள்ளும் பெண்களுக்கு கட்சிகளுக்குளேயே அவர்களுக்கான  சம உரிமைகளோ ஜனநாயகமோ பேணப்படுவதில்லை. இவர்கள் குறித்து பாலியல் ரீதியான அவதூறுகள் வரும் போது கூட, அப்படி அவதூறு செய்தவர்களைத் தட்டிக் கேட்பதற்கும் யாருமில்லாமல் போவதும் ஒரு பெரிய சவாலே.

சிக்கல்: 5

சில பெண்களே பெண்களுக்கு எதிராக ஆண்களின் திறமைகளையும் அரசியல் அனுபவங்களையும்  மட்டுமே வெளிக்கொணர வேண்டும் என்ற சிந்தனையுள்ளவர்களாக இருப்பதும் வருந்தத் தக்கது.

இது அரசியலில் அல்லது  மக்கள் உரிமை சார்ந்த சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்த சில பெண்களின் கசப்பான அனுபவங்களில் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

சிக்கல்: 6

அறிவும்,ஆளுமையும், திறமையும் கொண்ட பல பெண்கள் எமது சமூகத்தில் இருந்தாலும் கூட அவர்கள் தாமாகவே அரசியலுக்கு வரத்  தயங்குகிறார்கள் அல்லது அரசியல் பற்றிய சிந்தனை இல்லாது இருக்கிறார்கள். இப்படியானவர்களில் சிலர்  தமது கணவர், தந்தை அல்லது சகோதரர்கள் அரசியலில் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களைத் தொடர்ந்து அரசியலுக்கு வர முயற்சிக்கிறார்கள். இது தாம் சுயமாகச் சிந்திக்காது வெறும் அனுதாபத்தை மூலதனமாக்கியே அரசியலுக்கு வருகிறார்கள் என்ற பெயரையே இவர்களுக்கு கொடுக்கிறது.   பெண்களை உற்சாகமூட்டி அவர்களுக்குத் தேவையான அரசியல் சார்ந்த பயிற்சிகள் கொடுக்காமல் அவர்களுக்கு அவர்களது உரிமைகளை வென்றெடுக்கும் ஆளுமை போதவில்லை எனக்குற்றம் சாட்டி அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு, தேர்தல் காலத்தில் மட்டும் தமக்கு தேவை என வரும் போது, தமது கட்சிலிருந்து யாராவது ஒருவரின் உறவையோ நட்பையோ வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுப்பதும் நடக்கிறது. 

 

இத்தனை சவால்களையும் தாண்டி ஒரு பெண் அரசியலுக்கு வந்து அல்லது வரும் போது, அவளால் என்ன சாதிக்கப்பட்டாலும் அது பெண்களுக்கான ஒரு வெற்றியாகவே கருதப்பட வேண்டும்.  புலம் பெயர் தேசங்களில் இருக்கும் பெண்கள் தமது அரசியல் அனுபவங்களையும் திறமைகளையும் தாயகத்திலுள்ள பெண்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். 

கட்சிகளுக்குள் ஆண் ஆதிக்கம், சம உரிமைகளும் , ஜனநாயகமும்   பேணப்படுவதில்லை போன்ற உள்கட்சி சிக்கல்களால் அதிகமான அரசியல் கட்சிகள் தமக்குள்ளேயே பிளவுபட்டிருப்பதால்,பல சுமைகளைத் தாண்டி வரும் பெண் வேட்பாளர்களுக்கு   இது எந்த விதத்தில் நன்மை பயக்கும் என்பது கேள்விக்குறியே.  பெண்கள் தமது கருத்துக்களை முன் வைக்க முடியாமல் இருப்பதுடன் தான்  சேர்ந்த கட்சிகளில் உள்ள ஆண்கள் முன் வைக்கின்ற கருத்துக்களை, தமது விருப்பு இல்லா விட்டாலும் கூட அமைதியாகவே ஆதரிக்கவும்   வேண்டிவருகிறது.

தேர்தல் காலத்துக்கு மாத்திரமல்லாமல் பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான தொடர்ச்சியான பயிற்சிகளும் அது குறித்த சிந்தனைகளும் வளர்த்தெடுக்கப்பட்ட வேண்டும். சில ஊடகங்களில்ப்  பெண்களை பாலியல் போகப் பொருளாகச் சித்தரிக்கும் வேளைகளில் உடனடி எதிர்ப்பை தெரிவிப்பது போன்ற விடயங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

பெண்களுக்கான ஒரு தனியான கட்சி ஒன்றே இப்படியான ஆண் ஆதிக்கம் நிறைந்த ஏனைய கட்சிகளிலிருந்து விடுபட்டு பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க உதவும் என்ற கருத்தையும் நாம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

நிகழ்ச்சித் தொகுப்பு: ஆனந்தி பாலசூரியன், உமா ஷனிக்கா & விஜி

பேச்சாளர்கள் : ஸ் ரீன்  சரூர், ஸ்வத்திகா அருலிங்கம், வள்ளியம்மை சுப்ரமணியம், ஏஞ்சல் குயின்டஸ், பிஸ்லியா பூட்டோ, வெற்றிச்செல்வி, மோகனதர்சினி, புஸ்பராணி , நளினி ரட்ணராஜா & சுமதி சிவமோகன் ( பெண்ணிய, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் & சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள்  )


Comments

  1. உங்கள் கருத்துக்களீ ஆழமானவை சிந்திக்க வேண்டியவை. அருமையான கட்டுரை

    ReplyDelete
  2. அருமையான கருத்துக்கள்.

    ReplyDelete
  3. உங்கள் எழுத்து நடையை கண்டு சொக்கிபோனேன்,

    overseasல் படித்த பெண் இந்தளவு தமிழ் இருக்கிறது , வாவ் வாவ் ,

    மனசார சொல்லுறேன் இந்தளவு கமாண்ட் இந்த language அப்பாடா எழுதும் விதம் ஒரு விதம்,,

    அதில வைச்சிருக்கும் கருத்துக்கள் அடுத்த ஆச்சரியம்..
    நல்லா கவனிச்சு இருக்கிறீங்க Deep observation and deep thinking person எண்டு மட்டும் விளங்குது .. let me read the rest..


    சிக்கல் 2: இது பெண்களுக்கு மட்டுமல்ல ஒரு கட்சிக்குள் என்று வரும் எல்லோருக்கும் பொருந்தும், கட்சி எண்டு வந்ததும் கட்சியின் செயல்குழு சொல்லுவதற்கு அநேகமாய் தான் தலை ஆடணும் அதுக்கு தானே இவ்வளவு செலவழிச்சு உள்வாங்கி அதைவிட பிரசாரம் எ, ல்லாம் செய்படுகிறது 🙂

    சிக்கல் 3 : இது ஒரு சாபக்கேடு எங்கும் இந்த நிலைமை இருந்தாலும் முக்கியமா கீழ் ஆசிய நாடுகளில் அநேகம் . (India and SL are the worse)

    சிக்கல் 4: மறைமுகமான பயமுறுத்தல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கும் , என்ன பிரச்சனை என்றால் ஒருத்தர் தான் பொது வாழ்வுக்கு வர முதல் தன கடந்தகால வடுக்கள் இனி புண்ணாக மாறுமா என்று நினைப்பது இல்ல அதே நேரம் கட்சிக்கு வந்ததும் எத்தனையோ கண்கள் தன்னை அவதானிச்சு கொண்டு இருப்பது என்பதும் யோசிப்பதில்லை, தலைய மண்ணுக்குள் புதைச்சு கொண்டு செயல் படுகிறது இல்லாட்டி அழுகிறது,, இதுக்கு எருமை மாட்டு தோல் மன வலிமை தேவை

    எது நடந்தாலும் டோன்ட் கேர் மெண்டாலிட்டி
    சிக்கல்: 6 100% agree
    அரசியல் சார்ந்த பயிற்சிகள் இது ரொம்பவே முக்கியமானது, அரசியல் செய்வது லேசுப்பட்ட காரியம் இல்ல அதுக்கு நிறைய நெளிவு சுளிவு , சுத்தமானவனாக காட்டிக்கொண்டு சுத்துமாத்து , தேவையான இடம் பார்த்து வெட்டிவிடுதல் அதே நேரம் தனிப்பட்ட கோபம் தாபம் இடுக்கை கூடாது இப்பிடி நிறைய படிக்க வேணும் ,
    t

    ReplyDelete
  4. உண்மை பெண்களுக்கான அரசியல் அறிவு குறைவு , அல்லது ஆர்வம் இல்லை, மற்றயது அதற்கான நேர ஒதுக்கீடு என்பது கொஞ்சம் சிரமம் தரும் காரியமாக அமைந்து விடுகிறது.அதுவும் குறிப்பாக திருமணமான பெண்களுக்கு சமையல், குழந்தை, குடும்ப பொறுப்பு என்று. அதை விட முக்கியமான ஒரு காரணம் ஆண்களின் ஆதிக்க , ஆளுமையின் கீழ் பெண்களின் வளர்ச்சி தடையாக இருக்கிறது. அருமையான் கட்டுரை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நிறமில்லா மனிதர்கள்