வெளிநாட்டு ஐயா -சிறுகதை
வெளிநாட்டு ஐயா !
சோழகக் காற்று சுழற்றி அடித்ததில் பால் போன்ற மணல் தரையில், தூரிகை இன்றியே காற்றின் கைகள் தன்னிச்சையாக ஒரு விதமான சித்திரங்களை வரைந்திருந்ததைப் பார்த்த அவள் கால்கள் இயல்பாகவே அவற்றை விலத்தி நடந்தன. மேடுகளாகவும் பள்ளங்களாகவும் காற்றினால் வரையப்பட்டிருந்த அந்த அழகான வேலைப்பாடுகள் நிறைத்த சித்திரங்களை அவள் எப்போதுமே ரசிப்பது வழக்கம். பனம் மரங்களும் தென்னம்பிள்ளைகளும் நாவல் மரங்களும் மலை வேம்புகளுமாக பரவிக் கிடந்த அந்த காட்டு வழியில் அவள் கண்கள், பற்றைகளுக்குள் பதுங்கியிருந்து என்னைப் பறித்துக் கொள் என்று அழைப்பு விட்ட ஈச்சை பழங்களையும் பார்க்கத் தவறவில்லை.
மெதுவாகக் கால்களை தண்ணீரில் வைத்து அதன் தட்ப வெப்பங்களை அறிந்து கொண்டபோதுநிர்ச்சலனமாக இருந்த நீரின் தூய்மையில், குளத்தின் அடியில் இருந்த சின்னச் சின்ன மீன்கள் கூட்டம் கூட்டமாக நீந்தி விளையாடுவது தெரிந்தது. பழக்க தோஷத்தில் அவளும் சிறிது நேரத்தில் ஒரு மீனாக மாறி நீரில் அமிழ்ந்து மூழ்கி எழும்பிய போது மனதில் ஏற்பட்ட ஒரு வகை அமைதித் தன்மை அவளுக்குப் பிடித்திருந்தது.
மீன்களோடு மீனாக நீந்தி தன்னை மறந்தவளுக்கு நேரம் ஓடியது தெரியவில்லை. தலையை நிமிர்த்தி குளத்துக்கு வெளியே தெரிந்த பால் மணல் காட்டை கண்களால் நோட்டம் விட்ட போது அயல் வளவுக்குள் இருந்து தென்னோலை இழுத்து வந்து கொண்டிருந்த பவளம் மாமியின் கண்களில் பட்டுத்தொலைத்தலில் அவளுக்கு உதறல் எடுத்தது.
தன் பாரிய உடம்பையும் தென்னோலைகளையும் சேர்த்து இழுத்துப் போகும் மாமியைப் பார்க்க அவளுக்கு பாவமாகவும் அதே நேரம் தன்னை அம்மாவிடம் வத்தி வைப்பா என்பது கோபமாகவும் வந்தது.
நீந்தி எழுந்து மாமி போய்விட்டா என்று உறுதிப்படுத்தி, தண்ணீரால் உடம்போடு ஓட்டிப் பிடித்த தன் உடைகளை சரி செய்த போது யாரோ தன்னை உற்றுப் பார்க்குமாப்போல் ஒரு வித உணர்வு மீண்டும் அவளை ஆட்கொண்டது. இலகுவில் பயந்து விடாத அவளது சுபாவம் அவளை ஆடாமல் ஒரே இடத்தில நிற்க வைத்தது. அப்படிச் செய்வதன் மூலம் யாராவது கோவிலுக்கோ குளத்துக்கோ வந்தால் திரும்பவும் குளத்து நீரில் முங்கி விடுவது என முடிவு செய்தவளுக்கு அடுத்த சில வினாடிகளுக்கு யாரும் அப்படி நடமாடவில்லை என்பது உறுதியாகியது.
மாற்று ஆடைகளை எடுத்து மாற்றுவதற்காக பற்றையை நோக்கி சில அடிகள் எடுத்து வைத்த போது
யாரோ அவசர அவசரமாக அடர்ந்த மரங்களின் பின்னிருந்து வேகமாக ஓட்டமும் நடையுமாக மறைவது தெரிந்தது. மண் நிறத்தில் ஒரு தொப்பி மட்டும் தெரிந்தது, முகம் தெரியவில்லை. எதற்காக ஓடி மறைய வேண்டும்? யாராக இருக்கும்? இப்படியான சம்பவம் இத்துடன் மூன்றாவது தரம் நடந்துள்ளதை அவள் எண்ணிப் பார்த்துக்கொண்டாள்.
இரண்டு மாதங்களின் முன்னரும் அவள் உடை மாற்றப் போன வேளையில், அடர்ந்த அந்த காட்டு மரங்களுடனான பற்றைகளின் பின்னே முதல் நாள் பெய்த மழையின் ஈரலிப்பான மணலில் கால் தடங்கள் புதிதாய் ஏற்பட்டிருந்தது. அதன் பின்னர் கடந்த மாதத்தில், மீண்டும் ஒரு முறை உடை மாற்ற வந்த போது வழமைக்கு மாறாய் அவ்விடத்தில் ஒரு வித சுருட்டு அல்லது சிகரெட் வாடை அந்த குளிர்ச்சியான காற்றில் கலந்து வந்தது. தென்னை மரங்களும் பனை மரங்களுமாய் காற்றோடு அசைந்தாடும் போது எல்லா இடங்களிலும் காற்று அசைந்தாடி பால் போன்ற மணற் பரப்பில் எந்த அடையாளங்கள் இருந்தாலும் அதை அழித்து விடும் தன்மை கொண்டதாய் இருந்தது. அப்படியிருக்க புதிதாய் பதிந்த கால் தடங்கள் மட்டுமே ஒரு சில நிமிடங்களுக்கு நின்று பிடிக்கும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஆகவே இந்த புதிதாய் தெரிந்த காலடியடையாளம் கூட யாரோ தான் நீந்துவதை நின்று
அவதானிக்கிறார்கள் என்பதை அவளுக்கு மிகவும் தெளிவாகவே பறை சாற்றியது . யாரோ நீண்ட நேரமாக தன்னை அவதானித்திருக்கிறார்கள் என்பது அவளுக்கு ஆத்திரத்தை ஊட்டியது.
இன்றும் அவளுக்கு அது அச்சத்தைக் கொடுக்காமல் ஒரு விதமான கோபத்தையே ஏற்படுத்தியிருந்தது. இது எனது கிராமம், இது எனது கோவிலடி, என் சுதந்திரமான, ஒரேயொரு பொழுது போக்கு மையத்தையும் குளத்தையும் குழப்பியடிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என அவள் ஆணித்தரமாய் நம்பினாள். அன்றிலிருந்து அவள் தன் தற்பாதுகாப்புக்காய் கோவிலடிக்கு வரும் போதெல்லாம் தன் உடைகளுடன் யாருக்கும் தெரியாமல் அம்மாவின் வெங்காயம் உரிக்கும் குட்டிக்கத்தியை கையோடு எடுத்து வந்தாள். அது சரியா பிழையா என எண்ணிப்பார்க்கும் மனநிலையைக் கடப்பதற்கு அவள் சிக்கல் மிகுந்த வாழ்வின் நடைமுறையே உதவியது போலும்.
அவளுக்கு சிறிதாய் ஆச்சரியமும் ஒரு விதமான அருவருப்பும் முதன் முதலில் ஏற்பட்டது அவளுக்கே வியப்பாய் தான் இருந்தது. எவ்வளவு நேரம் தன்னை ஒருவர் பார்த்திருக்கக் கூடும் என்ற நினைவு அவளுக்கு ஒரு விதமான சங்கடத்தையும் தோற்றுவித்தது. இனிமேல் தனியாய் வரக்கூடாது, தன் தோழிகள் சங்கரியை அல்லது லதாவைக் கூட்டி வரவேண்டும் என எண்ணிக்கொண்டாள்.
அம்மா பலரது வீடுகளிலும் போய் வேலை பார்க்க வேண்டி வந்ததற்கு காரணமான அப்பாவின் மீது அவளுக்கு கோபமும் அதனால் ஏற்பட்ட விரக்தியும் தான் அவளை இப்படி ஒரு இரண்டும் கெட்டான் நிலையில் வைத்திருந்தது. அவள் பாடசாலைக்குப் போய் வரும் நேரம் தவிர வீட்டில் பொழுது போக்கு சாதனங்கள் என எதுவும் இல்லாத பொருளாதார நிலை குறித்து அலட்டிக்கொள்ளும் நிலையில் அவள் இல்லை. பாடசாலை முடித்து வரும் போது அம்மா வீட்டில் இல்லாத நேரங்களில் அவள் துரு துருத்த காலும் கையும் சும்மா இருக்க விடாததால் அவள் காலாற கோவில் வளவு தேடி நடப்பதும் குளத்தில் நீந்துவதும் யாராவது தோழிகள் வந்தால் அவர்களுடன் தாயக்கட்டை விளையாடுவதும் தான் அவள் பொழுது போக்கு. வாசிகசாலை இப்போது தான் மீண்டும் ஏதோ கிடைத்த புத்தங்கங்களோடு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. வீட்டிலிருந்து அரை மணி நேரம் நடந்து போய் நூலகம் திறக்கப்படாமல் அல்லது தனக்கு விரும்பிய நூல்கள் எல்லாம் அவளுக்கு முதலே எடுக்கப்பட்டு விட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிய நாட்கள் அதிகரிக்க அவளும் அங்கு போவதை குறைத்துக்கொண்டாள் .இப்போது யாராவது பக்கத்து வீடுகளில் வாங்கிய தினசரி பத்திரிகைகளை ஒரு எழுத்து விடாமல் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது.
"பள்ளிகூடத்தலாலை வந்த பிள்ளையை இவ்வளவு நேரமும் காணேலை எண்டு பாத்தன். எங்க பிள்ளை போனனீங்கள் ?" வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் வீட்டின் சொந்தகார அம்மா கேள்வி எழுப்பியபடி அவளைப் பாசத்துடன் பார்த்தாள்.
"நீந்துவம் எண்டு கோவிலடிக்குப் போட்டு வந்தனான் !"
எத்தனை நிமிடங்கள் தூங்கியிருப்பாள் எனத் தெரியவில்லை ஆயினும் அவளுக்கு தூக்கக் கலகத்திலும் தன்னை யாரோ பார்ப்பது போன்ற அதே உணர்வோடு தூக்கிவாரிப் போட எழுந்தவளுக்கு அம்மா வேலையால் வந்து முன் முற்றத்தில் நின்றபடியே வீட்டுக்கார அம்மாவுடன் கதைத்துக் கொண்டிருந்தது கேட்டு அவளுக்கு சிறிதே ஆறுதலாகப் பட்டது. அம்மாவின் நிலவரம் பார்த்து அவளுக்கு பதினெட்டு வயதாக முன்னம் அவளை தத்தெடுக்க விரும்புவதாக அந்த வயோதிபத் தம்பதி கூறியதாலோ என்னவோ அம்மாவுக்கு அவர்களை அப்படிப் பிடித்திருந்தது. அவளுக்கும் மற்றைய வெளிநாட்டினர் போலல்லாத, தாம் பிறந்த நாட்டை அந்நியமாகப் பார்க்காத அவர்களை பிடித்துத் தான் போயிற்று.
"அம்மா அதைப் பற்றி எல்லாம் இப்ப யோசிக்க வேண்டாம், களைச்சு போய் வந்திருப்பீங்கள். தேத்தண்ணி ஒன்று போட்டு தரவோ?"
" அம்மா என்ன அதுக்கிடையில வந்தாச்சோ, போனதும் வந்ததுமாய் இருக்கு?"
இன்று சனிக்கிழமை, பாடசாலை வார விடுமுறை. அவள் ஏற்கனவே தன் தோழிகளை மூன்று மணியளவில் கோவிலடியில் சந்திப்பதாய் ஏற்பாடு செய்திருந்தாள். நிறைய கதைக்கலாம். நிறைய பாடலாம், இறுதியில் சின்னதாக நீந்திப் பின்னர் கோவில் கிணற்றில் குளிக்கலாம் எனவும் திட்டம் போடப்பட்டிருந்தது.
இவளைக் கண்டதும் வீட்டுக்கார அம்மாவும் ஐயாவும் பழையபடி இவளைத் தாங்கள் தம்முடன் வெளிநாட்டுக்கு கூட்டிப்போவதற்கான ஆதரவு விண்ணப்பம் கொடுப்பது சம்பந்தமாகப் பேச ஆரம்பித்ததில் இவள் வீட்டிலிருந்து கோவிலடிக்குப் போவதற்கு சிறிது தாமதமாகி விட்டது.
என்ன செய்யலாம் என யோசித்தவளுக்கு திடீரென அவர்கள் வீடு ஒரு இருபது நிமிட நடையில் போய் விடலாம் என்பது ஞாபகம் வர,
நீச்சல் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு அவர்கள் வீட்டுக்கு நடக்க எத்தனித்த வேளை திடீரென யாரோ அவளை பின்புறம் இருந்து கட்டிப்பிடிக்க அவள் நிலை தடுமாறினாள். அதிர்ச்சியை உள்வாங்கிப் பின் சுதாகரித்து தன் பையிலுள்ள குட்டிக்கத்தியை எடுக்க எத்தனித்த போது தன் முகத்தை யாரோ முழுவதுமாக ஒரு சாக்கைப் போட்டு கட்டுவதை உணர்ந்து கொண்டாள்.
அந்த உருவம் அவளை பற்றைக்கு பின்னால் இழுத்து செல்ல முற்படுவதை உணர்ந்து தன் பலம் எல்லாம் சேர்த்து மனப்பலத்தையும் உபயோகித்து ஒருவாறு தன் குட்டிக்கத்தியை கையில் எடுத்துக் கொண்டாள். அம்மாவை ஒரு கணம் அவள் மனதில் இருத்தியபோது அவளுக்கு வந்த அந்த அசுர பலத்தில் அவள் கைகள் தாமாகவே அந்த உருவத்தை குட்டிக்கத்தியால் ஓங்கிக் குத்தியது.
அதை அங்கு எதிர்பார்க்காத அந்த உருவத்தின் வலி மிகுந்த குளறல் ஒரு காட்டு விலங்கின் அவலமாக கோவில் வளவெங்கும் எதிரொலிக்க. தன் முகம் முழுவதுமாகக் கட்டப்பட்ட நிலையில்
அவளுக்கு அதிர்ச்சியும் பயமும் கலவையாய் எழுந்து, அம்மா அம்மா என்று கத்த
முயற்சிக்க, எந்த
சத்தமுமே அவள் தொண்டையிலிருந்து வர மறுத்தது.
பல அடிகள் ஓடிய பின், சிரமத்தின் மத்தியில் தான்சாக்கை எடுத்துவிட்டுப் பார்த்த போது தான் அவளுக்குத் தான் இன்னொரு தென்னம் வளவின் பின்புறம் நிற்பது தெரிந்தது. மூச்சிறைக்க மூச்சிறைக்க நின்றவளுக்கு அம்மா தேடுவாள் என்ற ஆதங்கமும் எழுந்தாலும், அவளுக்கிருந்த அதிர்ச்சியில் அயர்ந்து போனாள். சூரியன் மங்கி மறையும் போது, பிள்ளையார் கோவிலுக்கு விளக்கு வைக்க வந்தவர்கள் அடித்த மணிச்சத்தம் கேட்டு விழித்த போது தான் அவளுக்கு வீட்டை நோக்கி நகர முடிந்தது. கையிலிருந்த இரத்தம் தோய்ந்த கத்தியை அந்தத் தென்னம் வளவின் அடியிலிருந்த கேணிக்குள் வீசி எறிந்து விட்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினா ள் .
ஏன் இவ்வளவு கூட்டம் வீட்டில் என்று அதிர்ந்தவளுக்கு, அதை விடப் பெரிய அதிசயம் ஒன்று காத்திருந்தது. வேப்பம் மரத்தின் கீழே வீட்டுக்கார ஐயாவை சாக்குக் கட்டிலில் கிடத்தி இருந்தார்கள். அவரைச் சுற்றிக் கூட்-டம் இருக்க யாரோ கார் பிடித்து வர போயிருப்பதாய் கதைப்பது இவளுக்கும் கேட்டது. அவர் கைகளிலிருந்து வடிந்த இரத்தத்தைப் பார்த்து அவர் மனைவியான வீட்டுக்கார அம்மா மயங்கிச் சாய்ந்து விழுந்து விட்டதாய் சொன்ன பவளம் மாமி இவளைக் கண்டதும் குரலெடுத்து திட்டத் தொடங்கினாள்.
"இந்தக் குமரியும் அந்த அத்துவானாக் காட்டுப் பிள்ளையார் கோவிலுக்கு நீச்சலடிக்க போறதெல்லோ! சொல்வழி கேட்க மாட்டாள் ! இங்க பாத்தியே கோயிலுக்கு தனியாய்க் கும்பிடப் போன இந்த ஐயாவை எப்பிடி முனியடிச்சிருக்கு! முனியெண்டால் அடிச்சிப் போட்டு போயிருக்கும் இது வேற ஒண்டு, இன்னும் மோசமானது. இரத்தக்காட்டேரி!"
Comments
Post a Comment